இலங்கையின் முதலாவது சவாரி விலங்கியல் பூங்கா அடுத்த ஆண்டு அம்பாந்தோட்டையில் திறப்பு

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ரிதீகம பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இலங்கையின் முதலாவது சவாரி விலங்கியல் பூங்காவின் முதல் கட்ட நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தியாகியுள்ளன.

இந்த விலங்கியல் பூங்காவில் ஆபிரிக்க, ஆசிய, அவுஸ்திரேலிய சிங்கங்கள் மற்றும் சிறிய விலங்குகளுக்காக வலயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் ஆபிரிக்க சிங்கங்களுக்கான வலயத்தின் நிர்மாணப் பணிகள் பெருமளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த வருட ஆரம்பத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட உள்ளதாக இலங்கை தேசிய விலங்கியல் பூங்கா பணிப்பாளர் அனுர டி சில்வா தெரிவித்தார்.

சுமார் 500 ஏக்கரில் இந்த சவாரி விலங்கியல் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இதற்காக 1600 மில்லியன் ரூபா செலவிடப்பட்டு வருகிறது.

இந்த சவாரி விலங்கியல் பூங்காவில் சிங்கங்கள், புலிகள், சிறுத்தை இனங்கள், வேட்டை நாய்கள் உட்பட ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த விலங்குகளை காணமுடியும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் ஒரு விலங்கியல் மருத்துவமனை மற்றும் அதிகாரிகளுக்கான இரண்டு வாசஸ்தலங்களும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


யாழைச் சேர்ந்த பெண்ணொருவர் கிளிநொச்சியில் சடலமாக மீட்பு

யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கிளிநொச்சியில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சண்முகநாதன் செல்லம்மா (71) என்ற வயோதிபப் பெண்ணே, கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more…


தமிழத் தேசிய மக்களின் பலம் இருக்கும் வரைக்கும் எமது பணி தொடரும்: மாவை சேனாதிராஜா

அண்மைக்காலமாக நாட்டின் பல பாகங்களிலும் பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டங்கள் தோல்வியடைந்து வருவதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக த.தே.கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று நாவிதன்வெளி பிரதேசத்திற்கு வருகைதந்து பிரதேசசபை தொடர்பாகவும் கட்சியின்  எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையானார்.

இந்நிகழ்விற்கு த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா. பா.அரியநேத்திரன், அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களான தா.கலையரசன் மு.இராஜேஸ்வரன் மற்றும் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர். உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தவிசாளர் எஸ்.குணரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய மாவை சேனாதிராஜா,

இன்று எமது நாட்டிலே அரசாங்கக் கட்சியின் 16 பிரதேச சபைகளுக்கான வரவு செலவுத்திட்டங்களும், வடமாகாணசபையின் மூன்று பிரதேசத்திற்கான வரவு செலவுத்திட்டங்களும் திருகோணமலையின் வெருகல் பிரதேசத்திற்கான வரவு செலவுத்திட்டங்களும் தேல்வியடையும் நிலையில் இருப்பதனை காணமுடிகின்றது.

இதில் வடமாகாண சபையின் ஒரு பிரதேசத்திற்கான வரவு செலவுத்திட்டம் தற்போது எமது கட்சியின் செயற்பாட்டனால் வெற்றி காணப்பட்ட நிலையில் ஏனை பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டங்களும் வெற்றியடைய வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

இனிவரும் பிரதேச சபைகளின் வரவு செலவுத்திட்டத்தினையும் வெற்றியடைய வைப்பதற்கான நடவடிக்கைகளை கட்சி ஆதரவாளர்களுடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றோம்.

எமது கட்சி இந்த நாட்டிலே ஒரு ஜனநாயகம் உடைய கட்சி. திடீரென எந்த நடவடிக்கைகளையும் தன்னிச்சையாக எடுக்க முன்வராது என்பதனை அனைவரும் புரிந்து நடக்கவேண்டிய தேவைப்பாடு உண்டு.

அரசாங்கத்தினால் திணிக்கப்ட்ட அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் எம்முடன் இருந்து எமது கட்சிக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் ஜனநாயகமான முறையில் தமக்குள்ள வாக்குரிமையைப் பயன்படுத்தி எம்மினத்தின் பலத்தினை உலகறியச் செய்திருக்கின்றார்கள். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத அரசாங்கம் எமது கட்சி உறுப்பினர்களை தம்பக்கம் இணைப்பதில் குறியாக இருந்து செயற்பட்டார்கள்.

எமது இனம் அடக்குமுறைகளுக்குள் இருந்து வாழும் சமூகம் இதற்காக இழந்த இழப்புக்கள் ஏராளம் என்றே கூறமுடியும். வடமாகாணசபையை பொறுத்தவரையில் எமது மக்கள் முழுக்க முழுக்க இராணுவ அடக்கு முறைகளுக்குள் இருந்து கொண்டே தமிழ்த் தேசியத்தினை கட்டிக்காத்து அதிகளவான உறுப்பினர்களை தெரிவு செய்து வடமாகாண சபையையும் கைப்பற்றி இருக்கின்றார்கள் என்றால் அது மக்களின் முழுப்பலத்தின் வெளிப்பாடே என்றுதான் கூறமுடியும்.

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் செயற்பாடுகள் அன்று கலையரசன் தலைமையில் மிகவும் சிறப்பானமுறையிலே கொண்டு செல்லப்பட்டது என்பது நாமறிந்த உண்மையும் கூட. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அனந்தன் போன்ற சிலர் எமது கட்சியில் இருந்து கொண்டு ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து கொண்டு இங்கு நடைபெறும் அனைத்து வேலைப்பாடுகளுக்கும் முட்டுக்கட்டையாக செயற்படுவதாக அறிக்கைகள் எமக்கு கிடைத்திருக்கின்றன.

அது தொடர்பாக அவருக்கான நடவடிக்கையாக கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்திருந்தோம். அதனையும் பொருட்படுத்தாமல் எதிர்வரும் இப்பிரதேசசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்து வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்படுமானால் அவருக்கான அடுத்தகட்ட நடவடிக்கையினை எமது கட்சி எடுக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.


முல்லை. கொக்குத்தொடுவாயில் உச்சக்கட்ட நிலக்கொள்ளை​

kokkuthoduvai_ravi_001முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் உச்சக்கட்ட வேகத்தில் நில அபகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் கோயிலிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தூரத்திலேயே இவ்வாறான நிலக்கொள்ளை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதேச மக்களின் தகவலை அடுத்து, இன்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடிவிட்டு சிவலோகேஸ்வரன் உள்ளிட்ட மக்களில் சிலருடன் இன்று மாலை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரன், அங்கு இடம்பெறும் நில அபகரிப்பை நேரில் அவதானித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்றபோது, இரண்டு கொட்டில்களில் இருந்த சிங்களவர்களால் கனரக இயந்திரங்களின் உதவியோடு காடழிப்பு இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதையடுத்து இக்காடழிப்பு தொடர்பில் அவர்களிடம் நேரில் விசாரித்ததாக ரவிகரன் குறிப்பிட்டார்.

இதன் போது அவர்கள் பயந்த சுபாவத்தோடு, தாங்கள் ஒப்பந்த அடிப்படையில் காடு அழிப்பதாகவும், மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இது நடைபெறுவதாகவும் இத்திட்டத்தில் 22 சிங்களவர்களுக்கு தலா 25 ஏக்கர் வீதம் மாங்கன்றுகளை நடுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நடவேண்டிய மாங்கன்றுகளை தாம் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவித்தனர். தங்களின் முதலாளி வேலைக்கு அமர்த்தியதால் இதைச் செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, காடழிப்பு நடைபெறும் பகுதியை முற்றாக ஆராய்ந்து தகவல்களைச் சேகரித்ததாக அவர் தெரிவித்தார். இதேவேளை அப்பகுதிக்குச் சென்ற ரவிகரனை இராணுவப் புலனாய்வாளர் ஒருவர் பயணம் முழுவதும் தொடர்ந்து வந்துள்ளார்.

இதனை அவதானித்த வடமாகாண சபை உறுப்பினர், அவரிடம் எதற்காக என்னைப் பின்தொடர்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு ஒருவாறாக தன்னை சமாளித்துக் கொண்ட குறித்த நபர், இராணுவப் புலனாய்வாளர் என அவர் அறிமுகப்படுத்த,

பதிலளித்த ரவிகரன் “இங்கு இடம்பெறும் மோசமான நிலக்கொள்ளையை உலகறியச் செய்யவே நான் வந்துள்ளேன். நாளை விபரமாக ஊடகங்களில் இது வெளிவரும். ஆகவே என்னைப் பின்தொடர வேண்டிய அவசியம் உங்களுக்கில்லை” என்று பதிலளித்து விட்டுச் சென்றுள்ளார்.

பின்னர் இந்த நில அபகரிப்பு குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த ரவிகரன்,

இங்கு எங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை பறித்துக் கொடுப்பது, ஒரு புறம் நடைபெறுகையில், மறுபுறம் தோட்டச் செய்கை எனும் பெயரில் தற்போது சுமார் 600 ஏக்கர் நிலம் இப்போது அபகரிக்கப்படுகிறது.

எம் மக்கள் எங்களின் பூர்விக நிலத்தில் குடியிருப்பதற்கே காணிகள் இல்லாத நிலையில், எங்கள் தாயகத்தில் சிங்களவர்களுக்கு குடியிருப்புக்கள், தோட்டச் செய்கைகள் என்கிற பெயரில் நிலம் வழங்கப்படுகிறது.

இது ஒரு திட்டமிட்ட நிலக்கொள்ளையாகும். தமிழரின் தாயகமான வடகிழக்கை நிரந்தரமாக துண்டாடும் நோக்கிலேயே வடக்கை கிழக்குடன் இணைக்கிற முல்லைத்தீவில் இவ்வாறு நிலம் கொள்ளையடிக்கப்படுகிறது.

யார் நிலத்தை யார், யாருக்கு தாரை வார்ப்பது? இம்மண்ணின் காவலர்கள் இங்கே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.


ஆக்கிரமிப்புக்குள் அடிபணிந்து வாழ இலங்கை மக்கள் தயாரில்லை!- ஜனாதிபதி

Tabby cat, Max, 5 months old, sittingஆக்கிரமிப்புகளுக்குள் அடிபணிந்து வாழ்வதற்கு இலங்கை மக்கள் என்றுமே தயாராக இல்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற வியட்நாம் தேசிய தலைவரின் சிலை திறப்பு வைபவத்தில் உரையாற்றும் பொழுதே ஜனாதிபதி இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் மேம்மையாக மதிக்கும் நாடு. இலங்கை மக்களின் சுயாதீனமாக போராட்டங்களின் சாரம்சத்தை பிழிந்தே மகிந்த சிந்தனை வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டது.

பாரிய ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியட்நாம் தேசிய தலைவர் வோ சீ மிங்கின் சிலையை இலங்கை நிர்மாணித்ததை காலத்திற்கு உகந்த நடவடிக்கை என்றார்.


கொமன்வெல்த் மாநாடு குறித்து இந்தியா எடுத்துள்ள முடிவை மதிக்கிறேன்!- பிரிட்டன் பிரதமர் கமரூன்

ManMohanஇந்தியா, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து எடுத்துள்ள முடிவை தான் மதிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் புதுடெல்லியில் இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார்.

இந்தியாவிலிருந்து இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் இவர், அதற்கு முன்பு கொல்கத்தா செல்கிறார்.

பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள டேவிட் கமரூன் நேற்று புதுடெல்லி வந்தடைந்தார்.

பின்னர் இன்று மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையான வர்த்தகம், தொடர்புகள், பாதுகாப்பு, சர்வதேச பிரச்சினைகள் மற்றும் தீவிரவாதம் குறித்தும் பேச்சு நடத்தினார்.

பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கமரூன்,

இந்திய, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து எடுத்துள்ள முடிவை தான் மதிப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் தாம் கலந்துக் கொள்வதன் மூலம் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் சமாதான நடவடிக்கைகளை குறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றும் இதன் மூலம் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதுடெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் இவர் அங்கு கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.

பின்னர் அகில இந்திய வானொலிக்கு பிரத்தியேக பேட்டி அளிக்கும் அவர் அங்கிருந்து கொழும்புக்கு செல்கிறார்.

 


சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் – கலும் மக்ரேவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

9310172-blumen-rosen-vektor-rote-bl-ten-und-blatterஇறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மதவாச்சி, பூனாவ உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று மதியம் 12.00 மணி தொடக்கம் 1.00  மணி வரை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது,

சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று,

எமது ஒற்றுமையை குலைக்காதே,

சனல் 4 வேண்டாம்

போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

சனல் 4 ஊடகவியலாளார்கள் வட பகுதிக்கு செல்லவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ஏ – 9 வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்படைந்தது.

இதில் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்ன, ஜெயதிலக உள்ளிட்டோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கலும் மக்ரேவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலளார் கலும் மக்ரேவிற்கு எதிராக வாகனச் சாரதி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற வாகனத்தின் சாரதியே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

அனுராதபுரத்தில் மக்ரேவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து, பிரேத்தியேக வாகனமொன்றில் மக்ரே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு பணம் செலுத்தவில்லை என கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில், மக்ரேவிற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரே இந்த வாகனத்தை ஒழுங்கு செய்திருந்ததாகவும், இதனால் பொலிஸாரிடம் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் மக்ரே தெரிவித்திருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


வடக்கிற்கு படையெடுத்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்!

mayavanur_student_help_008பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் வடக்கிற்கு படையெடுத்துள்ளனர்.

அதில் சில ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் எக்ஸ்போ பிற் ஹோட்டலில் தங்கியிருக்கின்ற ஊடகவியலாளர்களில் சிலர் யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களை நாளை முதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள ஊடகவியலாளர்கள் செய்திகளை சேகரித்து அரசாங்கத்துக்கு எதிரான ஆவணப்படங்களை தயாரிக்கலாம் என அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சங்கிலியன் பூங்காவை இராணுவத் தேவைக்கு வழங்க முடியாது! யாழ். மாநகரசபை மேயர் யோகேஸ்வரி

யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியங்களோடு பின்னிப்பிணைந்த சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணியை இராணுவத் தேவைகளுக்காக வழங்க முடியாது என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேசத்தில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்கா காணியை இலங்கை பாதுகாப்புப் படையின் 27வது அணியின் C குழுவினருக்கு பாரப்படுத்தும்படி பத்தரமுல்லையிலுள்ள காணி ஆணையாளர் திணைக்களத்திலிருந்து நல்லூர் பிரதேச செயலருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

காணி ஆணையாளரின் பணிப்புரைக்கமைய நல்லூர் பிரதேச செயலாளர் குறித்த காணியை பாதுகாப்புப் படையினருக்கு வழங்குவது தொடர்பாக அண்மையில் யாழ். மாநகர சபையின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், அக்கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா இன்று செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள பதில் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தக் கடிததத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

சங்கிலியன் பூங்கா அமைந்துள்ள காணி யாழ். மாநகர சபையின் பராமரிப்பிலேயே உள்ளதுடன், அதனை ‘சங்கிலியன் பூங்கா’ என்ற பெயரில் 80 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான திட்டமும் தயாரிக்கப்பட்டு பூர்வாங்கப் பணிகளும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

எனவே, மேற்படி காணியை பாதுகாப்பு தரப்பினரின் தேவைக்கு வழங்க முடியாது என்பதுடன், சங்கிலியன் பூங்கா சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்கு மையமாக புனரமைக்கப்பட வேண்டுமென்பதே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடு என்றும் அந்த கடிதத்தில் முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


ஐ.தே.க. தலைமைத்துவ சபையில் இருந்து இன்னுமொருவர் விலகினார்!- பெண் உறுப்பினர் தலதா அத்துகோரள

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுவினால் நேற்று ஸ்தாபிக்கப்பட்ட தலைமைத்துவ சபையில் தாம் பங்கேற்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சி செயற்குழுக் கூட்டத்தின் போது, தலைமைத்துவ சபை தொடர்பில் தாம் சில யோசனைகளை முன்வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், தாம் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தலைமைத்துவ உறுப்புரிமை பதவியை ஏற்க தயார் என்று அவர் குறிப்பிட்டார்.

கரு ஜயசூரிய தலைமையில் நேற்றைய தினம் நியமிக்கப்பட்ட 9 பேரடங்கிய தலைமைத்துவ சபையில் இருந்து சஜித் பிரேமதாச விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.